Saturday, December 4, 2010

வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

நட்புக்கு,

இன்று நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறேன். அதனால் தான் நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவிடவும் முன்வந்துள்ளேன். பலராலும் கை விடப்பட்டது என்று கருதப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஆரம்பிக்கப் போவதற்கான சூழல் உருவாகி வருகிறது. என்ன நடந்தது என்பதின் விவரங்கள்: 

டிசம்பர் இரண்டாம் தேதி நியூயார்க்கில் இருக்கும் நீதிமன்றமானது MGM நிறுவனத்தின் உள் கட்டமைப்பை மாற்றி அமைப்பதற்கான திட்டத்தை ஒப்புக்கொண்டது. இந்த உள் கட்டமைப்பு மாற்றத்தின் மூலம் கேரி பார்பர் மற்றும் ரோஜர் பர்னபாம் ஆகிய இருவரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாகி விடுகின்றனர். இப்படி செய்வதின் மூலமாக MGM நிறுவனத்தின் பங்குகளை ஐந்து பில்லியன் டாலர்களுக்கு பண்டமாற்று செய்து சேப்டர் 11 என்று பலராலும் அழைக்கப்படும் பேங்க்ரப்சி (அதாவது நம்ம ஊரில மஞ்ச நோட்டிஸ்) நிலையில் இருந்து விடுபட முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கோர்ட் ஆர்டரானது டிசம்பர் பதினைந்து முதல் அமலுக்கு வந்து மாற்றங்கள் வர ஒரு மாதம் ஆகிவிடும். ஆகையால் பிறக்கப்போகும் புத்தாண்டானது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. 

அடுத்து வரப்போகும் ஜேம்ஸ் பாண்ட் படமானது இந்த வரிசையில் 23வது படமாகும். இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவற்றை எல்லாம் தொகுத்து இங்கு அளித்து இருக்கிறேன்:

இயக்குனர்:

sam_mendes இந்த படத்தை இயக்கப்போவது பிரிட்டனை சேர்ந்த பிரபல இயக்குனர் சாம் மென்டிஸ் (ஆஸ்கர் விருதினை வென்ற இயக்குனர் - நம்ம பாஷையில் சொல்வதானால் நடிகை கேட் வின்ஸ்லெட்டின்  புருஷன்). இவர் படங்களை ஒரு மனோதத்துவ கோணத்தில் எடுப்பதற்காகவே புகழ்பெற்றவர். இவரது இயக்கத்தில் படம் வந்தால் அது ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுத்தது போலிருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த தகவல் போலியாக இருக்கும் அல்லது கிசு கிசுவாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு, இதோ அதற்க்கான மறுப்பு காரணிகள்:

கேட் வின்ஸ்லெட் இயக்குனர் சாம் மென்டீசின் மனைவி. இருவரும் இப்போது தனித்தனியே வாழ்ந்து வந்தாலும் இன்னமும் அன்பு குறையாமல் இருப்பவர்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் கேட் வின்ஸ்லெட் இந்த படம் முடியும் வரை தன்னுடைய குழந்தையுடன் இங்கிலாந்து வந்து தங்க சம்மதித்துள்ளார். வழக்கமாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பைன்வுட் ஸ்டுடியோவில் தான் ஷூட்டிங் செய்யப்படும். ஆகையால் அந்த ஷூட்டிங் முடியும் வரை அனைவரும் ஒரு குடும்பமாக தங்கி இருக்கலாம் என்ற முடிவுடன் இந்த செயல்பாடு இருக்கிறது. ஆகையால் சாம் ஜேம்ஸ்பாண்ட் படமெடுப்பது உறுதி. மேலும் விவரங்களுக்கு: Daily Mail.

நடிகர்: Simon Russel beale

இந்த லேட்டஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பவர் லண்டனை சேர்ந்த நடிகர் ரஸ்ஸல் பேல். இவர் சமகால நாடக நடிகர்களில் தலை சிறந்தவர் என்று பலராலும் போற்றப்படுபவர். அதனையும் தாண்டி, இயக்குனர் சாம் மென்டீசின் சிறந்த நண்பரும்கூட. இதனால் இவர் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று சுற்று வட்டார தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு ஏன், இவரே ஜேம்ஸ் பாண்ட் ஆகவும் நடிக்கலாம் என்றுகூட ஓரிரு தகவல்கள் உலா வருகின்றன. வயதான இவர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிப்பதா என்று எனக்கு தோன்றியது. அதுவும் இவரது பல படங்களை இன்டர்நெட்டில் தேர்டிப்பார்த்தபோது, மனதிற்கு சற்றே கடினமாக இருந்தது. இருந்தாலும் நடிப்பே முக்கியம் என்று மனதி தேர்த்ரிக்கொண்டேன். அதுவும், மென்டிஸ் போன்ற ஒரு இயக்குனர் இவரின் எடையை குறைக்க வைத்தாலும் வைக்கலாம், யார் கண்டது? 

என்ன இருந்தாலும் நடுவில் பியர்ஸ் பிராஸ்னன் நடித்து மொக்கையாகிவிட்ட ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையை மறுபடியும் சரியான வழிக்கு கொண்டு வந்த டேனியல் கிரேக் இல்லாதது ஒரு குறையாகவே தோன்றுகிறது. நண்பர்களே, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? டேனியல் கிரேக் மறுபடியும் நடிக்க வேண்டுமா அல்லது வேறொரு நடிகர் நடிக்கலாமா? உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.

அடுத்த படம்: 

ஜேம்ஸ் பாண்ட் நடிக்கும் 23வது படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவரும் என்று ஒரு தகவல். அந்த தகவலை இங்கே படிக்கலாம். மற்ற சுவையான தகவல் என்னவென்றால், இனிமேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜேம்ஸ் பாண்ட் படம் வெளிவரும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளது தான். ஒரு வழியாக அனைத்து தடைகளையும் தாண்டி வருகிறார் நமது சாதனை மன்னன் ஜேம்ஸ் பாண்ட் 007. அவருக்கு வாழ்த்துக்கள். 

அடுத்த பதிவு: 

ஜம்போ ஸ்பெஷல் வந்துள்ளது மனதிற்கு ஒரு நிறைவை அளித்துள்ளது. ஆகையால் நண்பர் முத்து விசிறி அவர்கள் சொன்னது போல, காமிக்ஸ் வலை தளங்களிலும் ஒரு மறுமலர்ச்சி கண்டுள்ளது கண்கூடு. நானும் இனிமேல் ரெகுலராக கேம்ஸ் பாண்ட் பற்றி பதிவிடுவேன்.

அடுத்த பதிவு : ஜேம்ஸ் பாண்ட் அவர்களின் இந்திய வருகை.

Friday, July 2, 2010

23வது ஜேம்ஸ் பாண்ட் படம் (2012) ரத்தானது

நட்புக்கு, 

சென்ற பதிவாகிய புராஜெட் எக்ஸ் பற்றி கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவை தயார் செய்துக்கொண்டு இருக்கையில் இன்று காலை ஒரு துக்க செய்தி என்னை எட்டியது. அதாவது, இந்த ஆண்டு ஷூட்டிங் செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகவிருந்த ஜேம்ஸ் பாண்டின் 23வது திரைப்படம், போதிய பண வசதி இல்லாமையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த உளவாளியின் படத்திற்கா இந்த கதி என்று மனம் நொந்தவாறே இந்த பதிவினை இடுகிறேன். 

1962ஆம் ஆண்டு முதலில் வெளிவந்த டாக்டர் நோ படம் முதல் இது வரை மொத்தம் 22 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் அதிக இடைவெளி விட்டு வந்த படம் என்று பார்த்தால், 16 வது படமாகிய லைசென்ஸ் டு கில் (1989)  படத்திற்கும், 17வது படமாகிய கோல்டன் ஐ  (1995) படத்திற்கும் நடுவில் இருந்த அந்த ஆறு வருடங்கள் தான். அந்த அளவிற்கு இடைவெளி வர காரணம் என்னவெனில், அடுத்த ஜேம்ஸ் பாண்டாக யாரை நடிக்க வைப்பது என்று செலக்ஷன் நடந்து கொண்டு இருந்தது. அந்த புராசெஸ் உலக அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைவரையும் விரும்ப வைக்கும் அளவில் ஒருவரை தேர்ந்தெடுக்க அந்த EON Productions நிறுவனத்தினர் நேரம் எடுத்துக்கொண்டதில் தவறில்லை. ஆனால் இந்த முறை அந்த இடைவேளிதூரம் இன்னமும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. 

JamesBondLogo

இத்துணைக்கும், கடந்த இரண்டு படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து வரும் டேனியல் கிரேக் படங்கள் உலக அளவில் சிறப்பாகவே வரவேற்ப்பை பெற்றன. குறிப்பாக கேசினோ ராயல் படமானது (பழைய) ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. ஆகையால் புத்துயிர் பெற்றதாக கருதப்பட்ட இந்த பட வரிசை திடீரென்று தடை பட்டதில் உலகெங்கிலும் உள்ள பல ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு தாங்கொண்ணா துயரத்தை அளிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

வசூல் அளவில் இந்த கடைசி இரண்டு படங்கள் அதற்க்கு முந்தைய ரெகார்டுகளை உடைத்து சாதனை புரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட வசூல் விவரங்கள் கீழ்க்காணுமாறு:

  • கேசினோ ராயல் – 2006 – 385 Million Pounds Collection
  • குவாண்டம் ஆப் சொலஸ் – 2008 – 392 Million Pounds Collection (Best ever for 007 films)

007

இந்த 23வது 007 படத்தினை அமெரிக்கன் பியூட்டி என்ற ஆஸ்கார் விருதினை வென்ற இயக்குனர் Sam mendes இயக்கத்தில் MGM நிறுவனத்தின் இணை தயாரிப்பில், 132 Million Pound பட்ஜெட்டில் வெளிவர இருந்த இந்த படம் எப்படி, எந்த சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள, இன்று காலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை ஒரு முறை படித்து விடுங்கள்.

Daily Mirror – 007 News linkjames-bond-2

MI 6 news link

 

ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மற்றுமொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தினை காண்பது அரிது என்பது தெளிவாகிவிட்ட இந்த வேளையில், என்னுடைய மனதை தெளிவுபடுத்த மறுபடியும் ஒருமுறை என்னுடைய ஆல் டைம் கிளாசிக் படமாகிய டாக்டர் நோ படத்தினை பார்க்க செல்கிறேன். 

தொங்கும் இதயத்துடன் விடை பெறுவது,

உங்கள் நண்பன்.

Saturday, June 26, 2010

புராஜெக்ட் X - புத்தம் புதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்

கடந்த இரண்டு மாதங்களாக மர்மமாக இருந்த புதிர் (புராஜெக்ட் எக்ஸ்) விலகியதில் இருந்து ஆர்வமும் அதனுடன் தொற்றிக்கொண்டுவிட்டது. ஆம், ஜேம்ஸ் பாண்டின் புதிய நாவல் வருகிறது என்றால் என்னை போன்ற நெடுநாள் ரசிகர்களால் காத்திருக்கவே இயலாது.

இந்த விஷயம் புதிதாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு, இதோ கோர்வையான சம்பவங்கள்: உலகப்புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர் இயான் பிளெம்மிங். இவரது மறைவுக்கு பின் இந்த பாத்திரத்தின் நாவலாக்கம் சற்று தடை பட்டு இருந்தாலும் இப்போதும், அப்போதுமாக சில பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். இயான் பிளெம்மிங் அவர்களின் பிறந்த நாளாகிய மே 28 ஆம் தேதி. அதற்க்கு சரியாக ஒரு வாரம் முன்பிருந்தே அவரின் அதிகாரபூர்வமான தலத்தில் புராஜெக்ட் எக்ஸ் பற்றிய மர்மமான விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.

Jeffery_Deaver

படத்தில் காணப்படும் ஜெப்ரி டீவர் என்னும் இந்த புகழ்பெற்ற எழுத்தாளர்தான் இனிமேல் இரவாப்பெயர் பெற்றுள்ள ஜேம்ஸ் பாண்ட் கதைகளை நமக்கு அளிக்கப்போகிறவர். இவர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இயான் பிளெம்மிங் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் எழுதிய கார்டன் ஆப் பீஸ்ட்ஸ் ஈனும் அந்த நாவல்தான் அந்த அரிய விருதினை தட்டி சென்றது. (நாவல் என்றவுடன் ஏதோ நம்ம ஊரில் வரும் பாக்கெட் நாவல், கிரைம் நாவல் என்று எண்ணி விடாதீர்கள், இவை எல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய நாவல்கள்தான் - அட் லீஸ்ட் பக்கங்களின் எண்ணிக்கையிலாவது). இல்லையென்றால் நம்ம ராஜேஷ் குமார், ராஜேந்திரகுமார் ரசிகர்கள் எல்லாம் சண்டைக்கு வேற வந்துடுவாங்க. அதனால் இப்படி ஒரு டிஸ்கிளைமர்.

சமீப வருடங்களாக ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு நாவல் வரிசை ஆங்கிலத்தில் வந்துக்கொண்டு PROJECTXTitleஇருக்கிறது.  அந்த தொடரின் ரசிகர்கள் எல்லாம் ஒருவேளை இனிமேல் ஜூனியர் வரிசை கதைகள் வராதோ என்றெண்ணி ஐயம் கொண்டனர். ஆனால், அந்த வரிசையும் தொடர்ந்து வரும் என்று அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் கதை வரிசையானது நம்முடைய கதாநாயகன் உளவாளியாகுவதர்க்கு முன்பு நிகழ்திய சாகசங்களை பற்றி சொல்லப்படும் ஒரு கதைத் தொடராகும். நானும் ஒன்றிரண்டு கதைகளை படித்துள்ளேன். சிறப்பாக ஒன்றுமில்லை. அதே சமயம் மொக்கையாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

project x cover

இதோ, இதுதான் அடுத்து வரப்போகும் ஜேம்ஸ் பாண்ட் நாவலின் அட்டைப்படம். அடுத்த வருஷம் இயான் பிளெம்மிங் பிறந்த நாளில் (28th May 2011) வரப்போகும் இந்த புத்தகத்தை நீங்கள் இப்போதே இணைய தளத்தில் ஆர்டர் செய்யும் வசதியும் உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.

ஜெப்ரி டீவர் இப்போதே சுமார் 45 தலைப்புகளை தயார் செய்து வைத்துள்ளாராம். ஏனெனில் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களானாலும் சரி, திரைப்படங்களானாலும் சரி - தலைப்புகள் வித்தியாசமாகவும் ஆச்சர்யப்பட வைக்குமளவுக்கும் இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. அந்த பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஒரு சிறப்பான பெயரை விரைவில் தேர்வு செய்து முடிவெடுப்பாராம் ஜெப்ரி.

அதே சமயம், மே மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் அதே தேதியில் புத்தகம் வருமா அல்லது அதற்க்கு முன்பே (சந்தைப்படுத்த) வந்துவிடுமா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்படி நடந்தாலும் உலகமயமாக்கம் மற்றும் சந்தை மோகம் கொண்ட இன்றைய நிலையில் அது ஒரு சாதாரண விஷயமே.

அடுத்தட பதிவில், ஜேம்ஸ் பாண்டின் வாழ்கையும், ஆரம்ப கால நாட்களும்.